எனக்கு பெயர் இட்டது எப்போது?என் பெயர் விண்தாமரை. இந்த முறையில்  தான் என் பெயரை  எழுத  வேண்டுமென என் தாய் தந்தையர்  சொல்லிக் கொடுத்திருந்திருந்தனர். விண்தாமரை  நிலவு என பொருள் படும் என்று அப்பா  சொன்னார். முதலாம் ஆண்டு  முதல்  நாள் அதாவது, என் ஏழு  வயதில், வகுப்பு  ஆசிரியை நான் என்  பெயரை  பிழையாக எழுதுவதாகவும்  ‘விந்தாமரை’ என்று எழுதுவதுதான்  இலக்கணப்படி  முறையென்று  விளக்கினார்.. உன்  அப்பா  தவறாக  சொல்லி  கொடுத்திருக்கிறார் என்று  சொல்லி இனி  ‘ந்’ கொண்டே எழுத   வேண்டும் என்றார். அத்தோடு  நான் ஆறாம் ஆண்டு   பயிலும்  வரை எல்லா தமிழ் ஆசிரியர்களும் அறிஞர் பெரு மக்களும்  இதே  பாடலைப் பாடினர். நானோ மாற்றிக் கொண்டேன் இல்லை. ஆசிரியர்  கருத்தை மதிக்காத மாணவி இல்லை  நான். என்  பெயரில்  வரும்   மூன்று சுழி ‘ண்’  மிகவும் மங்களகரமாய் தோன்றிற்று அதனால் தான்.

அது என்னைப் பற்றி ஒரு சிறிய விளக்கம்.  கடந்த பதிவில் முகநூலில் ஒருவர்  அகத்தியரின் படத்தை ஏற்றம் செய்திருந்தார் என சொன்னேனே? படத்துடன் நாடி வாசிப்பை பற்றியும் எழுதி இருந்தார். உடனே நானும் எனக்கு இப்போதே நாடி படித்து ஆக வேண்டும் என்று சண்முகம் ஐயாவின் முகநூலுக்கு நாடி வாசிப்பாளரின் தொலைப்பேசி எண் கேட்டு எழுதியிருந்தேன். அப்போது அவர் முகம் பார்த்ததில்லை, அவ்வளவாக பழக்கமுமில்லை. எண் கிடைத்ததும் நாடி வாசிப்பாளர் திரு.ரமேஷ் ஐயாவிற்கு தொடர்பு கொண்டேன். தொடர்பு கொண்டால். இவ்வளவு நாள் காக்க வைத்தது போதவில்லை ஐய்யனுக்கு, ரமேஷ் ஐயா தமிழ் நாட்டிலிருந்து வர  இன்னும்  ஒரு மாதமாகும் என்று சொல்லிவிட்டனர். இத்தனை ஆண்டுகள்  ஏதோ  ஒன்றை  தேடிக்கொண்டிருந்த ஏக்கம் கொடுமை  என்றால், காரணியை தெரிந்த பின்னும் காத்திருந்தது கொடுமையிலும் கொடுமை. ஒரு வழியாக ஒரு மாதம்  என்ற ஒரு யுகம் முடிந்து ரமேஷ் ஐயாவை பார்க்கும் நாள்  வந்தது நான் என் கணவர்  ஆறு மாதமே நிறைந்த என் மகனும் சென்றோம்…

அங்கு என் கட்டை விரல் ரேகை மட்டும் எடுத்துக் கொண்டு சில நிமிடங்கள் உள்ளே சென்று வெளியே வந்த அவர் என் ஓலையை உறுதிபடுத்திக் கொள்ள என் பெயர் ராசி நட்சத்திரம் யாவையும் சொன்னார். அதில் என் பெயர் விண்தாமரை என்று குறிப்பிட்டார். குழப்பத்துடன் எப்படி என் பெயரை தெளிவாக சொல்கிறீர் என்று கேட்க ஓலையில் அகத்தியர் இப்படி  தான் குறிப்பிட்டிருக்கிறார் அம்மா என்றார். அந்த நிமிடம் மனதுக்குள்ளே  “கேளுங்கள் தமிழ் கற்று தேர்ந்த அறிஞர் பெருந்தகைவர்களே அகத்தியம்  கண்ட அகத்திய மாமுனியே எனக்கு இட்ட பெயர் இது தான்” என்று ஒறக்கக் கத்த வேண்டும்  என  தோன்றிற்று. நான் உடல்  எடுப்பதற்கு முதலே எனக்கு பெயர்  வைத்து அனுப்பி  பின்னே அவரும் வந்தது போல் இருந்தது. நாடியை தொடர்ந்து படிக்கத் தொடங்கினார்  ரமேஷ் ஐயா. நடந்தது நடக்கப்  போவது என நிறைய கனித்திருந்தார் அகத்தீசர். அதில் “என் மகளே” என்று  ஒரு வரியில் குறிப்பிட்டார். அத்தோடு சொன்ன மற்றவை எல்லாம் புலப்படவில்லை எனக்கு. கண்ணீர் மட்டும் தாரை தாரையாக தரையை நனைத்துக் கொண்டிருந்தது.

 நாடி வாசிப்பு முடிந்ததும் மன நிறைவுடன் கண்கள் வீங்கிப்போய் வீடு வந்து சேர்ந்தேன். வாழ்விலும் சித்த மார்கத்திர்குள் வந்து  சேர்ந்தேன். தேடல் கிடைத்தது, நாடி படித்தாகி விட்டது இனி எல்லாம் சுகமே என்று சொல்வேன் என்று நினைப்பீர்கள்..நானும் அப்படித்தான் நினைத்தேன் ஆனால் நடந்தவை  வேறு. மறு பதிவில் தொடர்கிறேன் அன்பர்களே!

Comments

Popular posts from this blog

என் தேடல்