என் தேடல்

எழுத வேண்டும் என்றே  ஆசையும்  கரு பொருளும்  என் சிந்தையின் கர்பத்திலே பல நாட்கள் கலைந்து விட்டது. கர்பம் கலைப்பது சரி அல்லவே ஆதலால் பிறப்பிற்க  முடிவு செய்து விட்ட  வேளை இதை எழுதி கொண்டு இருக்கிறேன்.   இன்னும்   ஒரு   காரணம்  என்னவென்றால்  இது  பற்றி எழுதாவிட்டால் என்  பிறப்பே பாழ் ஆகிவிடும்.

'என் தேடல்' என்று  இந்த படிவத்திற்கு  தலைப்பிட்டு கதையை... என் பயணத்தை தொடங்குகிறேன் .  என் சிறு வயது முதல் எதையோ ஒன்றை தேடிக்கொண்டிருப்பேன். கூட்டத்தில் யாரையோ, பேழைக்குள் எதையோ, சும்மா இருக்கும் போதும் யாருடைய வருகைக்கோ காத்துக்கொண்டிருப்பேன் மற்றும் எதோ ஒன்றை தொலைத்ததுபோல் தேடிக்கொண்டே இருப்பேன். அது என்னவென்று தெரிந்ததில்லை யாரிடமாவது சொல்லவேண்டும் என்ற அறிவும் அப்போது எனக்கு இல்லை. இப்படியே வருடங்கள் அனுபவங்ளாக கடந்து கொண்டிருந்தது. அனுபவங்கள் கசப்பாகவும் இனிமையாகவும் கலந்து இருந்தன. கசப்பான அனுபவங்கள் மனதை புல்லுருவி  போல் நச்சரிக்கும் போதெல்லாம் அந்த எதோ ஒன்றிடமே  கற்பனையில் புலம்பி தீர்த்துவிடுவேன். என்னவென்று தெரியாவிட்டாலும் வாய் பேசமுடியாமல் கண்ணீர் மட்டும் பேசும் தருணங்களில் அந்த  ஏதோவொன்றின்  நினைவு என் ஆத்மாவிற்கு இதமாக இருப்பதாய் நான்  உணர்த்து உண்டு.

புத்தகங்களில் என் தேடல் கிடைக்குமோ என்று பல புத்தகங்கள் வாங்கி படித்தேன்… அது புத்தகக் குவியலாக ஆகியதுதான் மிச்சம், என் தேடல் அவைகளில் வரவே இல்லை.… ஒரு வேளை குருமார்களாக இருக்க கூடுமோ என்று எண்ணி இதுதான் நான்  தேடியது என்று ஆறுதலடைந்தேன். ஆனால் என் மனம் அமைதி அடையவில்லை.… இப்படி சொல்வதால் அவர்களின் உபதேசத்தில் குறை கண்டேன் என்றில்லை. என் தேடல் அங்கு எங்கும் பூர்த்தி ஆகவில்லை என்பதுதான். ஆகவே என் தேடல் தொடர்ந்தது.

இந்தே குழப்பத்திலே எனக்கு  ஒரு மகன் பிறந்தான்,  அவன் பிறப்பிர்க்குப் பிறகு தேடுதலாக இருந்த உணர்வு  மன உழைச்சலாக  மாறியது. சொல்வதர்க்கு  காரணமேயின்றி அந்த ஒன்றை  நினைத்து அழுவேன். தூக்கம் தடைப்  பட்டது, பசி  மறந்தது, செய்யும் எல்லா  வேலையும்  பட்டுப் போனது. இனி  நான் தேடும் அந்த ஒன்றை அறியாமலே  நாட்கள்  கழிந்து விடுமோ  என்ற அச்சம் ஆட்கொண்டது.  தாய்மை அடைந்த உணர்வையும் மீறி நான் தேடிக்கொண்டிருப்பது பொய்யா? ஏன் எதையோ  தொலைத்த மன நிலையிலே இருக்கிறேன் என்னும் கேள்விகள் 24 மணி நேரமும் என்னுளே ஓடிக்கொண்டிருந்தது. ஆம்!  சொல்லியே ஆகவேண்டும், ஒரு சமயம் எனக்கு பேய் பிடித்திருப்பதாகக்கூட  என் குடும்பத்தினர் சந்தேகித்தனர்!

ஒரு நாள்  முகநூலில் யாரோ ஒருவர் ஒரு  படத்தை  பதிவு ஏற்றம் செய்திருந்தார். அந்த முகநூல் பக்கதிர்க்குள் எப்படி அடைந்தேன்  என்று தெரியவில்லை. அந்த  படத்தில்  இருந்த  உருவத்தை  பார்த்ததும்  பல  வருட  தேடலால்  கலங்கி இருந்த  மனம்  தானாக அடங்கியது. அதுவே தொடக்கம் அந்த  ஒன்று  பகிங்கிரமாக  என்  வாழ்க்கையில்  பிரசன்னமாகியது. அதன் பின்னரெ  நான் தேடிய  ‘அது’ என்னுடனேதான் பயணித்திருந்ததும் அறியாமையினால்  பாவி நானே  அதை மறைத்துக்கொண்டிருந்ததும் தெரிந்தது.

என் தேடலாகிய   அந்த எதோ ஒன்று   நான் அப்பா என்றழைத்து  பின் அம்மா என்றழைக்க தொடங்கிய பிரபஞ்சமே உருவாகிய கருணா மூர்த்தி அகத்தியர் தான்.  வாசகர்களிடம்  பகிர்ந்துக் கொள்ள  நிறைய  இருக்கிரது இனி  வரும்  பதிவில் எங்கள் உறவு எப்படி தெளிந்தது என்று  கதைக்கிறேன். இவ்வேளை தன்னைச்  சுற்றி உள்ளவர்களின்  படைப்பாற்றலை  பெரிதும் ஊக்குவிக்கும்    திரு.சண்முகம் ஆவடையப்பா அவர்களுக்கு  மனதார  நன்றி கூறிக்கொள்கிறேன்.


Comments

 1. அருமையான தொடக்கம். வாழ்த்துக்கள் தாயே.
  காத்திருக்கின்றோம்.

  நன்றி,
  ரா.ராகேஷ்
  http://tut-temple.blogspot.in/

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

எனக்கு பெயர் இட்டது எப்போது?